Thursday, 4 August 2016

தமிழரின் ஏவுகணைத் தொழில் நுட்பம் !


உங்களால் நம்ப முடியவில்லை, இல்லையா ? ஆம் நூற்றுக்கு நூறு உண்மையே !

தூத்துக்குடியில் ஆங்கிலேய படைத் தலைவர் கர்னல் ஆக்னு (Col.Agnew ) தனது தலைமைக்கு எழுதிய கடிதத்தில்  தூத்துக்குடி தமிழராகிய  ஜாதி தலைவர் டான் கேப்ரியல் (Don Gabriel Vaz Gomes ) என்ற மீனவகுல தலைவர், ( இன்றும் தூத்துகுடி சாதித் தலைவர் அவர் வழியினரே)    மருதிருவர் வேண்டுகோளின்படி  ஏவுகணைத் தயாரித்து சோதனை செய்தார் என்றும்  வெடிபொருள் , போர்க்கருவிகளை ஊமைத்துரைக்கு அளித்தார் என்றும்  அவரைக் கைது செய்து தண்டிக்க வேண்டும் என்று எழுதினார் !

குமுதம்  இதழில் மணிகண்டன் 'தூத்துக்குடி சாதித் தலைவர் டான் கேபிரியல் வாஸ் கோமெசு ' பற்றி எழுதிய கட்டுரையில் காணப்பட்ட குறிப்பு :


நன்றி : குமுதம் வார இதழ்

இன்றும் இக்கடிதம் கர்னல் ஆக்னு (Col.Agnew ) சென்னை எழும்பூரில் உள்ள அரசு ஆவணக் காப்பகத்தில் உள்ளது !


இந்திய வரலாற்றுப் பேராயத்தால் (Indian History Congress )  புறந்தள்ளப்பட்ட வீர மங்கை வேலு நாச்சியார் அவரது தளபதிகள் மருது சகோதரர்களின் வரலாற்றைக்   கூர்ந்து ஆராய்ந்து நோக்கின் இந்த வீரம் விளைந்த மண்ணின் சாதனைகள்  வெளிப்படும் !

 வீரமங்கை வேலுநாச்சியார்


ஜான்சி ராணிக்கு முன்னர் வெள்ளையரை எதிர்த்து நின்று வெற்றி கொண்ட மறவர்குல  வீர மங்கை வேலு நாச்சியார் அவரது தளபதிகள் மருதிருவர்களின் விடுதலைப் போரின் வரலாறு இந்திய நடுவண் அரசால் மறைக்கப்பட்ட அவலத்தைப் எடுத்த தலைப்பிற்குள் செல்வதற்கு முன்னால் பதிவு செய்கிறேன் !

மருதிருவர் ஏவுகணைத் தாக்குதல் :


எனது கட்டுரை : வட அமெரிக்கத் தமிழ்ச் சங்கப் பேரவை சிறப்பிதழில் !




மருதிருவரின் ஏவுகணைத் தாக்குதலை கர்னல்சேம்சு வெல்சு (Col. James Welsh) எனும் படைத்தளபதி தனது  போர்க்கால நினைவுகள் (Military Reminiscences - Vol.I p. 51, p. 55, p.58, 68, 89 - 91) என்ற நூலில் சிறைக் கதவைத் தகர்த்து   ஊமைத்துரைக்கு  விடுதலைக்கு உதவிய மருதிருவர், மீனவ சாதித்  தலைவர் கோமசு இணைந்து உதவ  ஆறே நாளில் கட்டப்பட்ட  பாஞ்சாலங்குறிச்சி பற்றியும் அதைத் தகர்க்க முடியாத வெள்ளையர்      கல்கத்தாவில் இருந்து பீரங்கி கொணர்ந்து தகர்க்க 2 மாதங்கள் ஆயின என்றும் பதிவு செய்கிறார்.




இரு முறை  ஏவுகணைத் தாக்குதல் : 

மருதிருவரின் ஏவுகணைத் தாக்குதலை கர்னல்சேம்சு வெல்சு (Col. James Welsh) எனும் படைத்தளபதி தனது  போர்க்கால நினைவுகள் (Military Reminiscences - Vol.I p. 51, p. 55, p.58, 68, 89 - 91) என்ற நூலில் 26-07-1801 அன்று முதல் முறையாக ஏவுகணைத் தாக்குதலை எதிரிகள் நடத்தினார்கள் என்றும், அதை உறுதிப் படுத்தி மீண்டும் 30/07/1801 அன்று இரண்டாம் முறைத் தாக்கினர் என்ற பதிவைச் செய்கிறான்.


திப்புவின் ஏவுகணைகள் :

"மாகடல் போர்முறை : தொழில்நுட்ப அலைகள் "எனும் நூலில் திப்புசுல்தானின் ஏவுகணைகள் பற்றி முனைவர் ஏ .சிவதாணுபிள்ளை (Chief of DRDA) தனது நூலான  "மாகடல் போர்முறை: தொழில் நுட்ப அலைகள் " குறிப்பிடுகிறார்.
நன்றி :ஒரிசா பாலு 

Vide :Ocean Warfare: The Technology Waves by Dr. A Sivathanu Pillai

 

திப்புசுல்தான் தான் உலகில் முதன் முதலில் சீரங்கப்பட்டின போர்களில் ராக்கெட் ஏவுகணையைப் போராயுதமாக்ப் பயன்படுத்தி ஆங்கிலேயரைத் தோற்கடித்து அழியாப் புகழ் பெற்றான் .  இறுதிப்போரில் ஆங்கிலேயரின் நரித்தனத்தாலும், ஐதிராபத் நிசாம் உதவியுடனும் தோற்கடிக்கப்பட்டான்.

முதல் வேலையாக அவனிடமிருந்த ராக்கெட் ஏவுகணைகளையும், உதிரி பாகங்களையும் கப்பலில் இலண்டன் மாநகருக்கு எடுத்துச்சென்று .அவைகளைப் பிரித்துப்போட்டு அதனை பொறியியலின் மீட்டுருவாக்க முறையில் (Reverse engineering) ஏவுகணைகளை உற்பத்திசெய்து , இன்று அந்த நம்முடைய தொழில் நுட்ப அடிப்படையில் வளர்ந்தநிலையில் நிலவுப்பயணம் வரை உயர்ந்து நிற்கிறது. 

NASA - எனும் அமெரிக்க பெருவளநாட்டின் விண்வெளி மையத்தில் திப்பு சுல்தான் உருவத்தை பெருமையுடன்  பொறித்து வைத்துள்ளனர். இதனை அப்துல் கலாம் அவர்கள் தனது நூலில் பதிவு செய்துள்ளார்.


இலண்டன் மாநகரில் போர்கருவிகளின் அருங்காட்சியகத்தில் (Royal Artillary Museum Woolwich Arsenel London) திப்புசுல்தானின் இராக்கட் ஏவுகணைகளை பார்வைக்கு இன்றும் வைத்துள்ளார்கள். 

இதில்  என்ன தமிழரின் பங்கு என்ற வினா வந்தால் வியப்பில்லை. மேலே  ஆங்கில தளபதி Col. Agnew  தான் மேலிடத்திற்கு எழுதிய கடிதமே தமிழர்கள் தான் உலகில் முதன் முதலில் ராக்கெட் ஏவுகணை தயாரித்தனர் . சோதனை செய்தும் பார்த்தனர் என்று பதிவு செய்கிறது.

ஐதர் அலி அவர் மகன் திப்பு  சுல்தான் ஆகிய இருவரையும் திண்டுக்கல் கோட்டையில் வீரமங்கை வேலுநாசியாரும், அவர் படைத் தளபதிகள் மருது பாண்டியரும் ஐந்து முறைகள் சந்தித்தனர் என்பது வரலாற்றுப் பதிவு.

மேலும் கர்னல் சேம்சு வேல்சு தன நூலில் மருதிருவர் ஏவுகணைத் தாக்குதல் என்ற பதிவு அதனை உறுதி செய்கிறது. 

உலகம் முழுதும்லாறு என்பது 12 வகையான தரவுகளை ஏற்று வரலாற்றுப் பதிவாக நிறுவுகிறது . நாம்  மேலே கண்ட தரவுகள் முற்றும் உறுதியான வரவாற்று மூலகங்களே !

ஆனால் நம் இந்திய வரலாற்றுப் பேராயம் பெரியண்ணன் போலத் தமிழரின் ஏன் தென்னிந்திய அதுவும்  நாட்டு விடுதலைக்கான பங்களிப்பை புறக்கணிப்பது நம் இந்திய நாட்டிற்கு அழகன்று.

                                               ஐதர் அலி பிரான்சு  தளபதி  சந்திப்பு

  

 மருது பாண்டியர்

வெள்ளையரை  சிவகங்கைச் சீமையிலிருந்து விரட்ட ஐதரலி  வேலு நாச்சியருக்கு  எல்லா வகையிலும் உதவியதற்கு கைமாறாக மருது பாண்டியர்கள் , தூத்துக்குடி ஜாதித் தலைவர் டான் கேபிரியல்  ( Col. Anew பதிவு செய்தபடி) உதவியுடன் கிடைத்த  ஏவுகணைத் தொழில் நுட்பத்தை  திப்புசுல்தானுக்கு அளித்தனர். 

 திப்பு

இதற்குச் சான்றாக வெடிமருந்து மூலப் பொருள்கள் இன்றும் சிவகங்கை யிலும், தூத்துக்குடியிலும் கிடைப்பதும், அதன் காரணத்தால் சிவகாசியில் வெடிகள் செய்யும் தொழிலும், நடுவணரசால் அருகிலுள்ள திருச்சியில் துப்பாக்கித் தொழிற்சாலையும்  அமைந்துள்ளன !

எனவே கீழை நாட்டிலிருந்து, மேல் நாட்டுக்கு  தமிழன் அளித்த முதல் தொழில் நுட்பம் ஏவுகணைத் தொழில் நுட்பமே என நிறுவ முடிகிறது.


1 comment:

  1. மிகச்சிறப்பான வரலாற்று ஆய்வுக் கட்டுரை

    ReplyDelete